August 17, 2010

கவிஞர் கூத்தரசன்

கவிஞர் கூத்தரசன் வாழ்க்கைக் குறிப்பு

திரு.கூத்தரசன் அவர்கள் தமிழ், தமிழர் என்ற தணியாத உணர்வு கொண்ட தமிழ்க் கவிஞர் ஆவார். தமிழாசிரியர் திரு.சி.கிருட்ணன் - திருமதி.சி.பாக்கியம் (அமிர்தம்) இணையருக்கு 1966 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர். நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தாலும் தமிழ் உணர்வு மேலீட்டால் அதனைக் கூத்தரசன் என்று மொழி மாற்றம் செய்து கொண்டதில் வியப்பு  இல்லை.

ஆரம்பக் கல்வியை பேரா சங்கீத சபா தமிழ்ப் பள்ளியிலும், இடைநிலை உயர்நிலைக் கல்வியை ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியிலும், மெதடிஸ்ட் உயர்நிலைப் பள்ளியிலும் மேற்கொண்டார். சென்னை மாணவர் மன்றத்தின் வழி தமிழ் இலக்கியத்தில் புலவர் மணிப் பட்டயமும், அமெரிக்கா டிரினிட்டி பல்கலைக்கழகத்தின் வழி எம்.பி.எ பட்டமும் பெற்றுள்ளார்.

இவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் கூத்தரசன் என்ற பெயரில் தமிழ் நேசன், மலேசிய நண்பன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. மலேசிய வானொலியிலும் இவரின் கவிதைகள் ஒலித்துள்ளன. தமிழர் திருநாள் மேடைகளிலும் கரத்தரங்கங்களிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

தன்முனைப்புச் சொற்பொழிவுகள் நடத்துவதிலும் இவர் அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு கவிஞனாக வளர்வதற்கு ஆதரவாய் இருந்து யாப்பிலக்கணம் பயிற்றுவித்த தமிழ்க்குயில் கா.கலியபெருமாள், கனிமொழி குப்புசாமி ஆகியோரை இவர் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

பல்முனை அனுபவம் கொண்ட திரு.கூத்தரசன், பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினராகவும், பொன் பாவலர் மன்றத்தின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பதோடு பல குமுகாய இயக்கங்களிலும் அவ்வப்போது பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு திருமதி நா.இராணி (தமிழ்ப்பள்ளி ஆசிரியை) அவர்களோடு பகுத்தறிவுத் திருமணத்தின் மூலம் இல்லறம் பூண்ட திரு.கூத்தரசனுக்கு முகிலரசன், அறிவழகன் எனும் பெயர் கொண்ட இரு மகன்கள் உள்ளனர்.

வணிகத்துறையில் ஈடுபாடு கொண்டோருக்கு கவிதை வடிவிலானத் தன்முனைப்பு நூலையும், தன்னுடைய கவிதைத் தொகுப்பினையும் விரைவில் வெளியிடும் ஆர்வம் கொண்டுள்ள தமிழ் நெஞ்சர் கவிஞர் கூத்தரசனுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்புச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைவதோடு தனது வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறது.

கவிஞர் அருள் க. ஆறுமுகம்

கவிஞர் அருள் க. ஆறுமுகம் வாழ்க்கைக் குறிப்பு

மரபுக் கவிதைத் துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு கவிதைகள் படைத்து வரும் திரு.அருள் க. ஆறுமுகம், சிலாங்கூர், கோலகுபு பாரு எனும் ஊரில் பிறந்தவர் ஆவார். தந்தையின் பெயர் கண்ணன். தாயாரின் பெயர் கோவிந்தம்மாள்.

பல்லாண்டுகளாக எழுத்துலகில் ஈடுபட்டு வரும் இவருடைய சிறந்த கவிதைகள் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் தமிழகப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேடைப் பேச்சு, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு ஊட்டும் பேச்சு, நன்னெறிக் கோட்பாட்டு உரை ஆகியவற்றில் நாட்டம் கொண்டவரும் ஆவார். இவரின் தமிழ்ப் பணிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் அமரர் பாவலர் நா.இளங்கண்ணன், பாவலர் ஆ.கி.டேவிட், கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, பாவிலங்கோன் கோவி.மணிதாசன் ஆகியோர் என்பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றார்.

ஈப்போ பொன் பாவலர் மன்றத் தலைவராகச் செயலாற்றி வரும் திரு.அருள் க.ஆறுமுகம் அவர்கள், சமூகப் பணி செய்வதிலும் ஆர்வம் கொண்டவர். 2007 ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் விழாக்குழுவின் தலைவராகவும் செயல் ஆற்றியுள்ள இவர் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ஈப்போ பாவாணர் தமிழ் மன்றம் ஆகிய சங்கங்களில் செயலவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

காவல் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி வரும் திரு. அருள் ஆறுமுகம், 6 ஆம் படிவ அடிப்படைக் கல்வியும், மின்னியல்-மின்னணுவியல் பட்டயக் கல்வியும், சட்டக் கல்வியும் பெற்றவராவார். அரச மலேசியக் காவல் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 12 முறை நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளார்.

திருமதி தங்கம்பாளை இல்லறத் துணைவியாகக் கரம் பிடித்தக் கவிஞருக்கு ஜீவன், விஜேந்திரன் என்ற இரு ஆண்மகன்கள் உள்ளனர். ஜீவன் ஆஸ்திரேலியாவில் பொறியியல் இளங்கலைப் பட்டமும், தொழில்துறை முதுகலைப் பட்டமும் பெற்றவராவார். விஜேந்திரன் இந்தோனேசியாவில் MD மருத்துவம் பயின்று வருகிறார்.

கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ள கவிஞர் ஆறுமுகம் அவர்களுக்கு ‘அருள்’ என்ற அடைமொழியைக் கவிதை பாடி வழங்கியவர் அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரன் என்பது குறிப்பிடத் தக்கதாகும். மேலும் இவரின் பல்வேறு சேவைகளைப் பாராட்டி பேரா மாநில மன்னர் 2006 ஆம் ஆண்டில் பி.ஜே.கே பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டில் B.P.P. எனும் வீரப் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.


தமிழ் மொழி, கல்வி, சமுதாயம், கலை, பண்பாடு, ஒற்றுமை என பல்முனைச் சேவை ஆற்றி வரும் கவிஞர் அருள் ஆறுமுகம் அவர்களுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ்

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ் வாழ்க்கைக் குறிப்பு

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ் அவர்கள் ஈப்போ மாநகரில் நன்கு அறிமுகமான  பிரமுகராவார். திரு.மா.ஞானமுத்து, திருமதி.ஜே. பொன்னுத்தாய் இணையரின் பதினொரு பிள்ளைகளில் முதல் மகனாக 14.11.1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஈப்போ தமிழ் செட்டில்மெண்ட் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் 1.4.1960 காலக் கட்டத்தில் பிற்பகலில் ஏ.சி.எஸ் பள்லியில் ஆங்கிலக் கல்வியையும் பயின்று வந்தார்.



அன்பும் பண்பும் நிறைந்த இவர், தமிழ் ஏழாம் வகுப்பிலும், சீனியர் கேம்பிரிட்ஜ் சோதனையிலும் தேர்வு பெற்றார். 1962 ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியர் போதனாமுறை வகுப்பிலும் தேர்வு பெற்றார். 1960 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப்பள்ளியில் உதவித் தமிழ் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆசிரியர் பணியினூடே உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, செஞ்சிலுவைச் சங்கம், தமிழ் இளைஞர் மணி மன்றம், தமிழர் ஐக்கிய சங்கம் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளிலும் சேவையாற்றி வந்துள்ளார். 1963ல் ஈப்போவில் தமிழ் இளைஞர் மணிமன்றம் அமைந்த போது அதன் அமைப்புக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். ம.இ.கா. ஈப்போ பாராட் தொகுதி தாமான் பெர்த்தாமா கிளையின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

1973 ஆம் ஆண்டு தொடங்கி ஈப்போ, தமிழ் செட்டில்மெண்ட் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராக 23 ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில் அதே பள்ளியில் அவருக்கு ஆரம்பக் கல்வியைப் புகட்டிய ஆசிரியை திருமதி. செல்வநாயகம் அம்மையார் அவர்களுக்கும் இவர் தலைமை ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கவிதை, கதை, கட்டுரை எழுதுவதிலும் நாட்டம் காட்டிய இவர் 1969 ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியை திருமதி. கோ. சந்திரகாந்தம் அவர்களோடு இல்லறம் பூண்டார். இவருக்குப் பிள்ளைச் செல்வங்களாக ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பணி ஓய்வு பெற்ற நிலையிலும் இன்றும் இவர் தமிழ் ஆசிரியராகவே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பல பொது அமைப்புகளுக்கு ஆலோசகராகவும், திருச்சபைகளில் பொது ஊழியராகவும் நற்றொண்டு ஆற்றி வரும் திரு.மாணிக்கராஜ் அவர்களின் சேவையைப் பாராட்டி பேரா மாநில மன்னர் இவருக்கு பி.ஜே.கே விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். இத்தகு பெருமைமிக்க நமது சங்க உறுப்பினர் திரு.மாணிக்கராஜ் அவர்களை பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிச் சிறப்புச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.