August 17, 2010

கவிஞர் அருள் க. ஆறுமுகம்

கவிஞர் அருள் க. ஆறுமுகம் வாழ்க்கைக் குறிப்பு

மரபுக் கவிதைத் துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு கவிதைகள் படைத்து வரும் திரு.அருள் க. ஆறுமுகம், சிலாங்கூர், கோலகுபு பாரு எனும் ஊரில் பிறந்தவர் ஆவார். தந்தையின் பெயர் கண்ணன். தாயாரின் பெயர் கோவிந்தம்மாள்.

பல்லாண்டுகளாக எழுத்துலகில் ஈடுபட்டு வரும் இவருடைய சிறந்த கவிதைகள் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் தமிழகப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேடைப் பேச்சு, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு ஊட்டும் பேச்சு, நன்னெறிக் கோட்பாட்டு உரை ஆகியவற்றில் நாட்டம் கொண்டவரும் ஆவார். இவரின் தமிழ்ப் பணிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் அமரர் பாவலர் நா.இளங்கண்ணன், பாவலர் ஆ.கி.டேவிட், கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, பாவிலங்கோன் கோவி.மணிதாசன் ஆகியோர் என்பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றார்.

ஈப்போ பொன் பாவலர் மன்றத் தலைவராகச் செயலாற்றி வரும் திரு.அருள் க.ஆறுமுகம் அவர்கள், சமூகப் பணி செய்வதிலும் ஆர்வம் கொண்டவர். 2007 ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் விழாக்குழுவின் தலைவராகவும் செயல் ஆற்றியுள்ள இவர் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ஈப்போ பாவாணர் தமிழ் மன்றம் ஆகிய சங்கங்களில் செயலவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

காவல் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி வரும் திரு. அருள் ஆறுமுகம், 6 ஆம் படிவ அடிப்படைக் கல்வியும், மின்னியல்-மின்னணுவியல் பட்டயக் கல்வியும், சட்டக் கல்வியும் பெற்றவராவார். அரச மலேசியக் காவல் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 12 முறை நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளார்.

திருமதி தங்கம்பாளை இல்லறத் துணைவியாகக் கரம் பிடித்தக் கவிஞருக்கு ஜீவன், விஜேந்திரன் என்ற இரு ஆண்மகன்கள் உள்ளனர். ஜீவன் ஆஸ்திரேலியாவில் பொறியியல் இளங்கலைப் பட்டமும், தொழில்துறை முதுகலைப் பட்டமும் பெற்றவராவார். விஜேந்திரன் இந்தோனேசியாவில் MD மருத்துவம் பயின்று வருகிறார்.

கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ள கவிஞர் ஆறுமுகம் அவர்களுக்கு ‘அருள்’ என்ற அடைமொழியைக் கவிதை பாடி வழங்கியவர் அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரன் என்பது குறிப்பிடத் தக்கதாகும். மேலும் இவரின் பல்வேறு சேவைகளைப் பாராட்டி பேரா மாநில மன்னர் 2006 ஆம் ஆண்டில் பி.ஜே.கே பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டில் B.P.P. எனும் வீரப் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.


தமிழ் மொழி, கல்வி, சமுதாயம், கலை, பண்பாடு, ஒற்றுமை என பல்முனைச் சேவை ஆற்றி வரும் கவிஞர் அருள் ஆறுமுகம் அவர்களுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.