August 18, 2010

செயலாளர் சித.நாராயணன் செய்தி

அருமை உறுப்பினர்களே,
அன்பார்ந்த இலக்கிய ஆர்வலர்களே,
இனிய வணக்கம்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும்
கருப்பொருளை மையப் படுத்தி,
“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”

உலகெலாம் வியக்க, வீறுநடை போட்டு”
கோவை மாநகரில்,
விழாக்கோலம் பூண்டதை நாமறிவோம்.


தமிழை முனைப்போடு
முன்னெடுத்து செல்வதற்காக நடத்தப்பட்ட
செம்மொழி மாநாட்டுச் சுவடுகள்
இன்னமும் நெஞ்சக் குழியில்
பசுமை கொண்டிருக்கும் தருணத்தில்,
நம்முடைய சங்கத்தின்
முப்பத்தைந்தாம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்
உங்களைச் சந்திப்பதில்
உள்ளம் உவகை கொள்கிறது.


மகிழ்ச்சி கொள்ளும்
அதே வேலையில்
முப்பத்தைந்தாம் ஆண்டில் சங்கம்
அடியெடுத்து வைத்துள்ளதை
எண்ணிப் பார்க்கையில்
மலைப்பும் வியப்பும் ஏற்படுகிறது
.

இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில்,
எழுத்தாளர் மாநாடுகள், எழுத்தாளர் பேரவை,
இலக்கியக் கருத்தரங்குகள்,
தமிழறிஞர்களின் இலக்கிய நிகழ்ச்சிகள்,
சங்க வளர்ச்சிக்கு கலை நிகழ்ச்சிகள்,
சிறுகதைத் தொகுப்பு நூல்கள்,
மூத்த எழுத்தாளர்களுக்குப் பாராட்டுகள்
சிறுகதை-கவிதைப் பயிற்சிப் பட்டறைகள்,
அரசு மானியம்,
எழுத்தாளர்களுக்கு அரசு விருதுகள்,
இலக்கியச் சங்கமம் எனும் தலைப்பில்,
ஈப்போ, பங்கோர், லங்காவி ஆகிய நகரங்களில்

ஐந்து இலக்கிய நிகழ்ச்சிகள்!

அடுத்து,
நடைபெறவிருக்கும்,
ஆறாவது இலக்கியச் சங்கமத்தில்,
இலக்கிய நிகழ்வுகளுடன்,
கணினி பயிலரங்கம் நடத்தவும்,
சங்கத்திற்கென அகப்பக்கம்
உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்
இவை அனைத்தும் சஙத்தின் பரிணாமங்கள்.
இப்படிப்பட்ட,
நல்ல பணிகளைச் செய்துள்ள நிர்வாகத்தினர்,
பாராட்டுக்குரியவர்கள்.

அண்மையில்,
நமது சங்கத்தின்,
‘வேரும் விழுதுகளும்’
சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு
மகத்தான வெற்றியுடன்
அமைந்ததை நீங்கள் அறிவீர்கள்!

எடுத்த எடுப்பிலேயே
கணிசமான தொகை திரட்டப்பட்டதும்,
கட்டடம் வாங்கும் முயற்சியின் தொடக்கமே
அபாரமாக அமைந்து விட்டதும்,
இலக்கிய உணர்வாளர்களிடமிருந்து
சங்கத்திற்குக் கிடைத்த முதல் மரியாதை ஆகும்.


ஆதரவளித்த அனைத்து நன்நெஞ்சங்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக!

மாநிலத்தின் மாவட்டம் தோறும்
நூல் வெளியிடுவதற்கு சங்கம்
முயற்சித்து வருகிறது.


நூலின் அடுத்த அறிமுக நிகழ்வு
28.08.2010 இல்
அழகு நகரான தைப்பிங்கிலும்,
அதைத் தொடர்ந்து,
அரச நகரான கோலகங்சாரிலும்,
சித்தி பெற்ற சித்தியவானிலும்,
நாட்டின் தலைநகரிலும் நடத்துவதற்கு,
அவ்வட்டாரங்களில் உள்ள
நமது எழுத்தாளர்கள்
ஆவன செய்து வருகிறார்கள் என்பது
நமக்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகளாகும்.
இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள
உறுப்பினர்களை அன்புடன்
அழைக்கின்றோம்.

நூல் வெளியீட்டின் மூலம்
கட்டட நிதி திரட்டும் அதே வேளையில்,
கட்டடம் எழுவதற்கு
உறுப்பினர்களின் பங்களிப்பும்
இருக்க வேண்டும் என்பதே
நமது அவா, விருப்பம், அன்பு வேண்டுகோள் எல்லாம்.

ஆக, தயாள உள்ளத்துடன்
உங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.
அதற்கான பற்றுச் சீட்டு

உடனுக்குடன் உங்களுக்கு
வழங்கப்படும்.

ரிங்கிட் மலேசியா ஆயிரம் கொடுக்கும்
உறுப்பினர்களின் பெயர்கள்
கட்டடத்தில் பொருத்தப்படும்
பெயர் பட்டியலில் பதிக்கப்படும்.

இன்று நமது சங்கம்
ஓர் ஆலமரமாக வளர்ந்துள்ளது.
அது இன்னும் ஆழமாக வேரூன்றவும்,
விழுதுகள் பல பெருகவும்
மனமார்ச்சர்யமின்றி ஒன்றிணைந்து
செயலாற்றுவோம்!

- சித.நாராயணன்